திங்கள், ஜூலை 28

" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை-பாகம் 6







பாகம் 6
" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை



காரைக்குடிக்கு அருகில் இருக்கும் ஊர்கள்தான் பிள்ளையார்பட்டியும், குன்றக்குடியும்.

குன்றக்குடியில் உள்ள சண்முகநாதர் ஆலயம் 900 வருடங்களுக்கு முற்பட்டது.1900 ஆண்டுகளுக்கு முந்திய சமணப் பள்ளியும்,ஏராளமான கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.மயில் போன்ற வடிவத்தில் இந்தக் குன்று அமைந்திருப்பதால் , இவ்வூருக்கு மயூரகிரி என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது.

1946-இல் பொன்னம்பல தேசிகர் முக்தியடைய ஆறுமுக தேசிகர் 44-ஆவது குரு மகாசன்னிதானமாகப் பட்டம் சூடினார்.அவர் முதியவராக இருந்தால், ஒரு ஆற்றல் மிக்க தம்பிரானை தன் வாரிசாக நியமிக்க வேண்டிய கட்டாய நிலைமைக்குத் தள்ளப்பட்டார்.

1948 ஆம் வருடம் ஆவணி மாதத்தில் குன்றக்குடியில் ஆண்டுதோறும் நடக்கும் ஆதீன குரு பூஜைக்கு வழக்கம்போல எல்லா ஆதீனங்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பட்டன.

குரு பூசையில் கலந்து கொள்ள தருமபுர ஆதீனத்தின் பிரதிநிதியாக நம் கந்தசாமி தம்பிரானையும்,வழித்துணையாக சம்பந்த ஓதுவார் என்பவரையும் மாக சன்னிதானம் அனுப்பி வைத்தார்.

குரு பூஜையில் கலந்துகொண்ட நம் கந்தசாமி தம்பிரானின் புன்னைகைப் பூ முகம் குன்றக்குடி மடாலய ஊழியர்களின் மனதைக் கொள்ளையடித்தது.

குரு பூசைக்குப் பிறகு மாலையில் தர்பார் என்ற நிகழ்ச்சி நடைபெறும்.தலைமை வகித்த குன்றக்குடி மாகசன்னிதானம் அவர்கள், நம் கந்தசாமி தம்பிரானை வற்புறுத்தி பேச வைத்தார்.

பிறகு என்ன நடக்கும்? சும்மா விடவாரா?பிய்த்து உதறி விட்டார்,நம் கந்தசாமி தம்பிரான்.

பேச்சு நன்றாக இருப்பதாக, மாக சன்னிதானம் பாராட்டி,ஒரு தட்டில் ஆரஞ்சுப் பழங்களும்,பணமும் வைத்து திருக்கை வழக்கம்(அன்பளிப்பு)வழங்கி, தன் அன்பை ,மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.


அதன் பிறகு காரைக்குடி சோமசுந்தரம் பிள்ளை,குன்றக்குடி ஆதீன ஏஜெண்ட் நாராயணசாமி அய்யர் ஆகியோர்களுடன் மகா சன்னிதானம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.வேறு என்ன நம் கந்தசாமி தம்பிரானை தமது வாரிசாக நியமிப்பது என்பது தான்.

பிறகென்ன மற்ற தம்பிரான்களை விட கந்தசாமி தம்பிரானுக்கு உபசாரம் தட புடலாக நடந்தது.அவர்கள் மேலும் இரண்டு நாட்கள் தங்கி இருந்து போகும்படி வற்புறுத்தப்பட்டார்.

அவர்களின் விருப்பப் படி 2 நாட்கள் தங்கி விட்டு, நம் தம்பிரானும்,சம்பந்த ஓதுவாரும் தருமபுரம் திரும்பி வந்தார்கள்.

தருமபுர மடத்தின் அளவிற்கு குன்றக்குடிமடம் செழிப்பானதாக இல்லை.தகர வாளி,தகவரக் குவளை ஆகியவற்றை பயன்படுத்தி வந்ததால்,குன்றக்குடி மடத்தை தகரக் குவளை மடம் என்றே தருமபுர மடாலய ஊழியர்கள் கேலியாகப் பேசினார்கள்.எல்லா நிலைகளையும் சமமாகப் பார்க்கும் நம் தம்பிரான் துறவிகளுக்குள்ளேயுமா பொருளாதார வேறுபாடு? என்று வேதனைப்பட்டார்.

ஒரு நாள் நம் தம்பிரான் அறையில் இலக்கியம் படித்துக் கொண்டிருந்தார். அறை முன் கார் வந்து நின்றது.அதிலிருந்து திருக்கடவூர் கைலாசம் பிள்ளையும், இன்னொருவரும் தம்பிரானின் அறைக்குள் புகுந்தனர்.

கைலாசம் பிள்ளையுடன் ஏற்கனவே நெருங்கிப் பழகி இருந்ததால் அவர்களிருவரையும் வரவேற்று உட்காரச் சொன்னார்.

என்ன விஷயம் என்று விசாரிப்பதற்குள், "உங்கள் பெட்டியில் உடைகளை எடுத்து வையுங்கள்,இப்போதே நாம் புறப்பட வேண்டும் என்று அவசரப்பட்டார்",கைலாசம்.

ஒன்றும் புரியாத தம்பிரான் ,"என்னை எங்கே அழைக்கிறீர்கள்", எனக் கேட்க...

"அதையெல்லாம் அப்புறம் சொல்லுகிறேன்.முதலில் நீங்கள் எங்களுடன் கிளம்புங்கள்", என்றார்.

"மகா சன்னிதானம் அவர்களிடம் அனுமதிபெற வேண்டும்.."

"வேண்டாம்...வேண்டாம் அனுமதி கேட்டால் காரியமே கெட்டுப் போகும்.
சொல்லிக் கொண்டு போகிற காரியமல்ல இது...முதலில் விஷயத்தை முடித்துக் கொண்டு, பிறகு வந்து சொல்லலாம்", என்றார்.

"விவரம் தெரியாமல் நான் வரமாட்டேன்".

"குன்றக்குடி ஆதீனத்தில் உங்களுக்கு இளவரசு பட்டம் சூட்ட விரும்புகிறார்கள்.விஷயம் தெரிந்தால், உங்களைக் குன்றக்குடிக்கு அனுப்பவே மாட்டார்கள்.ஆகவே பட்டம் பெற்ற பிறகு இங்கே வந்து சொல்லிக் கொள்ளலாம்".

சோரம் போகிற பழக்கம் நம் தம்பிரானுக்கு கிடையாது.அவர்கள் நடந்து கொண்டமுறை எரிச்சலை தந்தது.

"தயவு செய்து போய் வாருங்கள். எனக்கு பட்டமும் வேண்டாம்.ஒன்றும் வேண்டாம்", என்று அவர்களை விரட்டி விட்டார்.

குன்றக்குடி மாக சன்னிதானம் விட்டு விடுவதாக இல்லை.இரண்டாம் முறையும் நம் தம்பிரானுக்கு தூது அனுப்பினார்.

இம்முறை கைலாசம் பிள்ளையுடன்,காரைக்குடி சோம சுந்தரம் பிள்ளையும்,ஆற்றங்கரை முத்தையா முதலியாரும் வந்து சேர்ந்தார்கள்.தம்பிரான் எவ்வளவோ மறுத்தும் அவர்கள் விடுவதாக இல்லை.

"மகா சன்னிதானம் உத்தரவு இல்லாமல் வரவே மாட்டேன்", என்று நம் தம்பிரான் அடம்பிடித்தார்.

"சன்னிதானம் உத்தரவு அளித்தால் வருவீர்களா?"

"சரி!"

எனவே அந்த மூவரும் மகா சன்னிதானம் கயிலை குருமணியை அணுகினார்கள்.அவர் நம் தம்பிரானின் கருத்து எதையும் கேட்டு அறியாமலேயே," அனுப்ப இயலாது!", என மறுத்து அனுப்பி விட்டார்.

எனவே திருவாடுதுறை ஆதினத்தில் இருந்த வேறொரு தம்பிரானை குன்றக்குடிக்கு வாரிசுப் பட்டம் சூட்ட அழைத்துச் சென்றனர்.அங்கு மூன்று மாத காலம் வைத்து இருந்தனர்.மகா சன்னிதானத்திற்கு அவரைப் பிடிக்காததால் திருப்பி அனுப்பி விட்டனர்.

அதன் பிறகு மூன்றாம் முறையாக தருமபுரத்திற்குப் படையெடுத்தனர்.இம்முறை குன்றக்குடி தம்பிரான்,கைலாசம்,ஓதுவார் ஆகியோரும் வந்திருந்தனர்.

கைலாசத் தம்பிரான் அதிக வயதானவர்....


...சுவாமிகளின் பாதச் சுவடுகள் தொடரும்....



_ஆதிசிவம்,சென்னை.






தவத்திரு குன்றக்குடி அடிகளார்-அவர்களின் கதை-பாகம் 5








பாகம் 5
" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை

சிவ பெருமானின் தவறே என்ற தலைப்பில் வாதிட்ட தம்பிரானின் கருத்தால், "அட! இவன் கடவுளையே குற்றம் சொல்லுகிறானே!" என்று கருதியதால் பழமைக் கருத்தில் ஊறிப் போனர்களிடையே ,இந்தப் பேச்சு சலசலப்பை உண்டாக்கியது.

இந்த பரபரப்புக்குப் பிறகு தருமபுர ஆதீனத்தில் இனி எப்போதும் பட்டிமன்றமே நடத்தக் கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்ற இந்த சம்பவமே காரணமானது.

சுதந்திர போராட்ட வீரர்கள் என்பதால் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், நேரு ஆகிய தலைவர்களை கடவுளுக்கு அடுத்த வரிசையில் போற்றி வந்தார்.அதனால் காங்கிரசு கட்சி மீது தனி மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்.

இந்த நிலையில் காங்கிரசுக்கு ஆதரவு கோரி நம் பச்சைத் தமிழன் காமராஜர் வருவதைக் கேள்விப் பட்டு நம் தம்பிரான் திருக்கோவில் பிரசாதம் வழங்கி வரவேற்றார்.

முன்பெல்லாம் கட்சிகளுக்கு சின்னங்கள் எல்லாம் ஒதுக்கப்பட வில்லை. வண்ண வண்ண வாக்கு பெட்டிகள் தான் வைக்கப் பட்டிருக்கும்.

காங்கிரசுக்கு மஞ்சள் பெட்டி ஒதுக்கப் பட்டிருந்தது.

திருப்பூர் குமரன்,பகத்சிங்,லாலா லஜபதிராய் போன்ற தியாகிகள் சிந்திய சிவப்புக்கறை, இது. அந்த தியாகிகள் நம்மிடம் வாக்கு கேட்கிறார்கள் என்று வித்தியாசமாக பேசி வாக்கு சேகரிக்கும் நம் அடிகளாரின் பேச்சை நம் காமராஜர் ஆர்வமாக கவனித்தார்.அதன் பிறகு சுமார் 20 ஆண்டுகாலம் வரை (1967 பொதுத் தேர்தல் வரை) காமராஜர் நம் அடிகளாருடன் நெருங்கிப் பழகினார்.


பேரறிஞர் அண்ணா அவர்களின் எதுகை மோனை அடுக்கு மொழி காந்த நடையில் வந்த திராவிட நாடு பத்திரிக்கை நம் அடிகளாரையும் கவர்ந்தது. வாரந்தோறும் ஆவலுடன் வாங்கிப் படிப்பார்.

படிப்பதோடு சும்மா இருப்பதில்லை.அண்ணா எழுதிய பெரிய புராண ஆராய்ச்சி என்ற நூலுக்கு மறுப்புக் கட்டுரைகள் எழுதவும் தயங்க மாட்டார்.

அரிஜன ஆலய பிரவேசத்தை சேக்கிழார் ஆதரித்தார்.சாதிப் பிரிவுகளை வளர்க்க நினைக்கவில்லை என்று எழுதிய அவரின் கட்டுரை தார்மீக இந்து என்ற பத்திரிக்கையில் வெளி வந்தது.அதன் பிறகும் அவர் கட்டுரைகள் அந்த இதழில் அடிக்கடி வெளி வந்தது.

ஒருநாள் திருச்சி டவுன் ஹால் மைதானத்தில் அண்ணாத்துரை பேசப் போகிறார் என்பதைக் கேள்விப் பட்டு அண்ணாவின் பேச்சைக் கேட்க ஆர்வம் கொண்டார்.

கடவுள் கொள்கையை மறுக்கும் அண்ணாவின் பொதுக் கூட்டத்திற்கு நம் போனால் சிக்கலாகுமே என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

சாயம் போன காவி உடையைத் தேடிப் பிடித்து உடுத்திக் கொண்டு , வை.சு.தண்டபானி என்ற நண்பருடன் சென்று மக்கள் கூட்டம் இல்லா மறுகோடியில் நின்று கொண்டு ஒலிபெருக்கியின் வழியாக அண்ணாவின் பேச்சை ரசித்துக் கேட்டார்.

அண்ணாவின் உருவம் தெளிவாகத் தெரிய வில்லை. மேடையில் நின்று கையை உயர்த்தி அசைத்தது மட்டும் தெரிந்தது.


தமிழ் ஆர்வம் மிக்க அந்த ஆதீனத்தில்,கந்தசாமி தம்பிரானின் தமிழ்க் கல்வியும் தங்குதடையின்றி தொடர்ந்தது.

தமிழ்க் கல்லூரியில் நம் தம்பிரான் பயின்றபோது,அவரின் ஆசிரியர்களில் ஒருவரான வஜ்ரவேலு முதலியார் அவர்கள் சைவ சமயம் பற்றி இலக்கிய சுவையுடன் பாடம் நடத்தியது, நம் தம்பிரானின் மனதைக் கவர்ந்தது.

ஒருநாள் அந்த ஆசிரியரை நம் தம்பிரான் தன் அறைக்கு அழைத்து வந்து அவருடன் அமர்ந்து உணவருந்திணார்.

கல்லூரியில் ஆசிரியர்தான் உயர்ந்தவர்.ஆனால் திருமடத்தில் ஆசிரியரை விட தம்பிரானே உயர்ந்தவர் என்பதால்.மற்றவர்களுக்குச் சமமாக அமர்ந்து அவர் உணவு உண்ணக் கூடாது.மடாலய ஆசாரப்படி அது குற்றம்.

அதற்கு பரிகாரமாக கந்தசாமி தம்பிரான் பஞ்சகவுமியம் சாப்பிட வேண்டும் என்ற
தண்டனை விதிக்கப்பட்டது.(பால்,மோர்,நெய் ஆகியவற்றுடன் கொஞ்சம் மாட்டு மூத்திரம்,மாட்டுச் சாணமும் கலந்து தயாரிக்கப் படுவது பஞ்ச கவுமியம்)

ஒரு முறை சீகாழி கோவிலில் ஆய்வுப் பணி மேற்கொண்டபோது, ஓர் உட்கோவில் இருப்பதை கண்டார்.அதன் சுவர்களிலும்,கோபுரத்திலும் செடிகளும் கொடிகளும்,ஆசையாக படர்ந்து கிடந்ததன, இது என்ன கோவில் என்று விசாரித்தார்.அந்த கோவிலின் சாவியை வாங்கி திறந்து பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி!

பசுக்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்தன.ஒருபுறம் வைக்கோல் போர்,மறுபுறம் சாணத்தால் ஆன மலை.இன்னொரு மூலையில் ஒன்றுக்கும் உதவாத தட்டுமுட்டுச் சாமான்களின் குவியல்.

பசுக்களை வேறு இடத்திற்கு மாற்றச் சொல்லியும், அந்த பொருட்களை அப்புறப் படுத்த சொல்லியும்,அந்த ஞானசம்பந்தரின் கோவில் இனி எப்போதும் வழிபாட்டிற்காக திறந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


...சுவாமிகளின் பாதச் சுவடுகள் தொடரும்....


_ஆதிசிவம்,சென்னை.







வெள்ளி, ஜூலை 25

தினத்தந்தி முதலிடம் வந்த கதை -பாகம் 2











பாகம் 2

தினத்தந்தி முதலிடம் வந்த கதை



"சேட், உன்னிடம் அடகு வைக்க என்னிடம் எதுவுமில்லை. இருந்ததையெல்லாம் உன்னிடந்தான் அடகு வைத்திருக்கிறேன்.என்னை நம்பியிருக்கும் ஊழியர்களுக்கு இன்று நான் ஊதியம் கொடுத்தே ஆக வேண்டும்,இந்த வெள்ளை பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு தருகிறேன்.சேட் நீ, இதில் என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்.நான் கட்டுப் படுகிறேன்!" என்றார்,ஆதித்தனார்.

அன்றே சம்பளம் வழங்கப்பட்டது. அதற்கு பிறகு அது மாதிரி சம்பவம் அவர் வாழ்க்கையில் வரவே இல்லை. எல்லாம் வெற்றிமுகம்,ஏறுமுகம் தான்!

ஒரு நாள் நள்ளிரவில் அமெரிக்க சனாதிபதி கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட
செய்தி வந்தது.ஏற்கனவே அச்சான பிரதிகள் நிறுத்தப்பட்டு,கென்னடியின் மரணச் செய்தியுடன் பத்திரிக்கை அச்சிடப்பட்டு எல்லா ஊர்களுக்கும் அனுப்பப்பட்டது.

மறுநாள் அந்த செய்தி தினத்தந்தியில் மட்டுமே இடம் பெற்றிருந்து.எந்த ஆங்கில,தமிழ் தினசரியிலும் அச்செய்தி பிரசுரமாகவில்லை!

அதைப் போலவே நேருவுக்குப் பிறகு பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியின் மரணச் செய்தி,இரவு 3 மணிக்கு வந்தது.இச்செய்தி தினத்தந்தியில் மட்டுமே முதல் பக்கம் எட்டுப் பத்தி செய்தியாக வெளி வந்தது.பெரும்பாலன பத்திரிக்கைகள் தவற விட்டன.சில பத்திரிக்கைகள் மட்டும் கடைசி செய்தியாக சிறிய அளவில் பிரசுரித்தன.

கென்னடி சுட்டுக் கொன்ற செய்தியை படித்து விட்டு, "இந்த செய்தியை ஏன் இரவிலேயே எனக்கு சொல்ல வில்லை?", என்றார்.

"அய்யா, அந்த செய்தி இரவு 2 மணிக்குத் தான் எங்களுக்கே கிடைத்தது. உங்கள்
தூக்கத்தை கெடுக்க வேண்டாம் என்று தான் சொல்ல வில்லை", என்றார்,ஊழியர்.

"தூங்குகிறவன் பத்திரிக்கையாளன் அல்ல. இதை எழுதி கண்ணில் படும்படி,மேசை மீது ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள்" , என்றார்,ஆதித்தனார்.குமுறும் எரிமலையாய்...



ஒரு முறை ஒரு கிராமத்து தந்தி ஏஜெண்டு ஆபிசுக்கு வந்திருந்தார்.அந்த விற்பனைப் பிரிவு குமாஸ்தா அவரை நிற்க வைத்தபடி பேசிக் கொண்டிருப்பதை ,தற்செயலாக தனது அறையில் இருந்து வந்த அய்யா,இதை பார்த்து விட்டார்.

உடனே அந்த ஏஜெண்டை தன் அறைக்கு அழைத்து, நாற்காலியில் உட்காரச் சொன்னார்
.பின்னர் விற்பனைப் பிரிவு குமாஸ்தாவைக் கூப்பிட்டு, "இவர் விற்றுக் கொடுக்கும் காசில் இருந்து தான் நமது பத்திரிக்கை நடக்கிறது.அதில் தான் உங்கள் சம்பளமும் அடங்குகிறது", என்றார்.

அந்த குமாஸ்தா ,தன் நடத்தைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

2 ஆவது உலகப் போர் நடந்த சமயம்.

"ரஷியா,ஜெர்மனி,இங்கிலாந்து என்று தினமும் செய்தி போடுறீங்க.அவை எங்கே இருக்கு? ", என்று ஆதித்தனார்,அய்யா கேட்டார்.

"இந்தியாவுக்கு மேற்கே", என்று தயக்கமாக பதில் வந்தது.

"சரி,அந்த நாடுகள் எங்கே இருக்குன்னு சாதாரண மக்களுக்கு புரியுமா,வாட்ச்மேன் கிட்டே முதலில் கேட்டு வாங்க", என்றார்,அய்யா.

"வாட்ச்மேன் தெரியவில்லை", என்று சொல்லி விட்டார்.

"பார்த்தீங்களா!யாருக்கும் புரியல.எந்த நாடு இந்தியாவுக்கு எந்தப் பக்கம் இருக்கு,எத்தனை மைல் தூரம்ன்னு எழுதி மேப் போடுங்க" ,என்றார்,அய்யா.

அடுத்த நாள் தந்தியின் விற்பனை இரண்டு மடங்கானது!

கென்னடி சுட்டுக் கொல்லப் பட்டார் என்று செய்தியை படித்த பிறகு அந்த ஆசிரியரை கூப்பிட்டு ,"சுட்டுக் கொல்லப் பட்டார் என்று தலைப்பை நீட்டி முழங்கக் கூடாது! சுட்டுக் கொலை! என்று தான் இருக்க வேண்டும்.இதற்குத் தான் அழுத்தம் அதிகம்!உச்சந்தலையில் ஓங்கி அடித்தது போலிருக்கும்!எழுதி வைத்துக் கொள்ளுங்கள்!", என்றார்,அய்யா.

கணேசன் என்பவர் தினத்தந்தி,கார்டூனில் சென்னை லைட் ஹவுசைக் காட்ட வேண்டியிருந்தது.

லைட் ஹவுஸ் படம் சரியாக இல்லை என்று தோன்றியது.ஆனால் அதை அப்படி மாற்று,இதை இப்படி மாற்று என்று சொல்ல வில்லை.

பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து "நேராகப் பாரீஸ் கார்னர் போய்,லைட் ஹவுசைப் பார்த்து விட்டு வாருங்கள்", என்றார்.

சித்திரக்காரர் தயங்கினார்.

"போய்ப் பார்த்துவிட்டு வாங்க,ஊம் போங்க என்று கண்டிப்புடன்", கூறினார்,ஆதித்தனார்.

கணேசன் லைட் ஹவுசைப் பார்த்து விட்டு வந்து தத்ரூமாக வரைந்தார்.பிறகே அதைப் பிரசுரம் செய்தார்,ஆதித்தனார்.



இந்தியாவிலேயே தமிழ் பத்திரிக்கைகள் தான் அதிகம் விற்பனையாகின்றன.இதற்குக் காரணம்,பேச்சு வழக்கில் உள்ள மொழியை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.இதற்கு வழிகாட்டியது தினத்தந்தி என்றார்,ஒரு முறை, பண்டித நேரு.

தினத்தந்தி அலுவலகத்தில் காவல்காரராக இருந்தவர்,"ஆத்தி", தினத்தந்தி வாசகர் என்பதற்கு அன்று அளவு கோலாக இருந்தவர் இந்த ஆத்தி தான்.

ஒரு முறை திருப்பதி லட்டு விலை உயர்ந்த போது,"திருப்பதி இலட்டு விலை உயர்வு" என்று அ.மா.சாமி என்பவர் இலக்கணச் சுத்தமாகச் செய்தியை எழுதியிருந்தார்.இதழ் அச்சாகி வந்து,அதைப் பார்த்த ஆதித்தனார்,ஆத்தியை அழைத்தார்.இந்த செய்தியைப் படிப்பா என்றார்.

ஆத்தி எழுத்துக் கூட்டிச் செய்தியைப் படித்தார்."தி...ரு...ப்...ப...தி... திருப்பதி, இ...ல...ட்...டு...ஈலட்டு", என்று படித்த போது,ஆதித்தனார் குறுக்கிட்டார்."அது என்னப்பா ஈ லட்டு?", என்று கேட்டார். "ஈ மொய்த்த லட்டு போல் இருக்கிறது, அய்யா!", என்று ஆத்தி சொல்ல, ஆதித்தனார் உட்பட செய்தி அறையிலிருந்த அத்தனை பேரும் "கொல்" என்று சிரித்து விட்டார்கள்.

பிறகென்ன,ஈ மொய்க்காத செய்தி வெளியானது.

ஆதித்தனார் அவர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் முடிந்ததும் சிறுவர்,சிறுமியர்கள் ஆட்டோ கிராப்பில், கையெழுத்து வாங்க நிற்பார்கள்.அவர்களிடம் ,"தம்பி நீ யார்?", என்று அய்யா கேட்பார்."நான் தமிழன்!", என்று கூறினால்தான் அவனுக்கு கையெழுத்தே கிடைக்கும்.இப்படி சிறுவர்,சிறுமியர்களிடையே தமிழன் என்ற உணர்வை ஊட்டி வளர்த்தவர்,நம் அய்யா ஆதித்தனார்.

ஒரு முறை ஆதித்தனார் தபால்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.உதவியாளர் வெரி அர்ஜெண்ட் என்று போட்டிருந்த தபாலை இரண்டு முறை எடுத்து அய்யா பார்வையில் படும்படி எடுத்து நீட்டினார்.

அந்த எழுத்துக்களை உற்றுப் பார்த்துவிட்டு ,"இதை நீ எழுதினாயா?",என்றார்.

"இல்லையே", என்று திகைத்தார்,உதவியாளர்.

"நான் எழுதினேனா?", என்று கேட்டார்.

"இல்லையே", என்றார்,மறுபடியும்.

"வெரி அர்ஜெண்ட் என்று நீயும் எழுதவில்லை,நானும் எழுத வில்லை.இது அவனுக்கு வெரி அர்ஜெண்ட்.அவன் எழுதியிருக்கிறான்.நமக்கு எது அர்ஜெண்டோ அதைக் கவனி", என்றார்,அய்யா.



1981 இல் மே 24 நாளில் அய்யா ஆதித்தனார் அவர்கள் நம்மை எல்லாம் விட்டு பிரிந்து விட்டார்.

இது வரை தினத்தந்தி ஆபாசம் என்ற சொல்லுக்கு ஆளானது இல்லை.

ஆதித்தனார் வெறும் பத்திரிக்கையாளர் மட்டுந்தான் என்று யாரும் தயவு செய்து நினைத்து விட வேண்டாம்.

தமிழ்நாடு தனி நாடாக வேண்டும்.நம் உரிமையை,நாம் ஏன் மத்திய (டெல்லி)அரசிடம் பிச்சையாக கேட்க வேண்டும்? என்று மேடைகளில் முழங்கியது மட்டும் அல்லாமல், பெரியார்,காமராசர்,அண்ணா,ஜீவா மாதிரி தலைவர்களோடும் சிறைக்குச் சென்றவர்.

வெறும் பணம் சம்பாதிக்க மட்டும் தோன்றியதில்லை,தினத்தந்தி!இன்று வரை தமிழுக்கு எதிராக,தமிழ் இனத்துக்கு எதிராக,தமிழ் மக்களுக்குஎதிரானஎந்த செய்தியையும்
வெளியிட்டதில்லை.






தமிழ் உயர..

தமிழ்நாடு உயரும்...!

தமிழ்நாடு உயர்ந்தால்..?

நாம் உயர்வோம்....!


இந்த செய்தியைத் தான்,

நாம் வீட்டு வாசல்கள் தோறும் வந்து

தினம் தினம்

சொல்லாமல்.....
சொல்லிச் செல்கிறது...

....தினத்தந்தி.....!


_ஆதிசிவம்,சென்னை.












தினத்தந்தி முதலிடம் வந்த கதை-பாகம் 1







பாகம் 1

தினத்தந்தி முதலிடம் வந்த கதை

அக்காலத்தில் சென்னைக்கு வெளியே எந்த நாளிதழும் வெளி வர வில்லை.

மதுரையில் 1942 நவம்பர் 1 ஆம் தேதி அன்று முதல் தான் (தினத்)தந்தி நாளிதழ் வெளி வரத் தொடங்கியது.சென்னையில் அச்சடிக்கும் பத்திரிக்கைகள் மதுரைக்கு மறுநாள் தான் வரும்.அதற்குள் செய்திகள் பழசாகிவிடும்.

எனவே, மதுரையிலிருந்து 150 மைலுக்குள் இருப்பவர்களுக்கு அன்றே செய்திகளை வழங்கியது ,தந்தி. செய்திகளின் தலைப்பில் நட்சத்திரக் குறியிட்டு இந்த செய்தி மற்ற பத்திரிக்கைகளில் நாளைதான் வெளி வரும் என்ற குறிப்போடு அசத்தலாக வெளிவரும்.

உலகிலேயே விற்பனை அதிகமுள்ள "டெய்லி மிரர்" என்ற லண்டன் செய்தித் தாள் முறையை பின்பற்றி தான் வெளிவந்தது,தந்தி.

அந்த காலத்தில் நாளிதழ் அலுவலகத்திற்கு உள்,வெளிநாட்டுச் செய்திகள் ஆகியவை எல்லாம் தந்தி மூலமாக தான் வரும்.அதை அடிப்படையாக வைத்தே அந்த பெயர் சூட்டப்பட்டது.

1942 இல் தினத்தந்தியின் நிறுவனர் அய்யா ஆதித்தனார் நடத்திய "மதுரை முரசு" , என்ற செய்தித் தாள் வெறும் இரண்டு மாதம் மட்டுமே வெளி வந்து, நின்று போனது.

காரணம்?

"வெள்ளையனே வெளியேறு" , என்ற போராட்டம் நடந்தபோது மதுரையில் போலீஸ் படை துப்பாக்கிச் சூடு நடத்தி மூன்று பேரை சுட்டுக் கொன்றது."ஒருவர் மட்டுத்தான் கொல்லப் பட்டார்" , என்று செய்தி வெளியிடும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டார்கள். "மூன்று பேர் கொல்லப் பட்டார்கள்!" என்ற செய்தியை வெளியிட்டுவிட்டு அத்துடன் அந்த இதழ் தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டது.

தந்தி தொடங்கிய பொழுது உலகப் போர் நடந்து கொண்டிருந்ததால் ,பத்திரிக்கைக்கான காகிதம் கிடைக்க வில்லை.தந்தி அலுவலகத்துக்கு நாள்தோறும் காலையில் வைக்கோல் வண்டி வரும்.மறுநாள் காலையில் அந்த வைக்கோல் தந்தி பத்திரிக்கையாக மாறி வெளியே போகும்.ஆரம்ப நாட்களில் தந்தி அலுவலகத்திலேயே காகிதமும் தயாரிக்கப்பட்டது.

சென்னையில் தந்தி தொடங்கப் பட்ட நேரத்தில் "பர்மாஷெல்" , என்ற பெட்ரோல் கம்பெனியின் சில்லறை விற்பனை நிலையங்கள் சென்னையில் இருந்தன.அதன் விளம்பரத்தை தந்தி படிப்பவர்கள் யாரும் கார் வைத்திருக்க மாட்டார்கள் என்று காரணம் சொல்லி தந்திக்கு விளம்பரம் தர,அந்த கம்பெனி மறுத்தது."ஒவ்வொரு டாக்சி டிரைவரும் டாக்சியின் சன்ஸேடில் தந்தியை செருகி நானே நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.
வைத்திருப்பதைக் காணமுடியும்" , என்று அந்த கம்பெனி நிர்வாகி ஒருவரே எடுத்துச் சொன்னார்.

இப்படித்தான் முதல் வெளிநாட்டு விளம்பரம் தந்திக்கு கிடைத்தது!


1943 செப்டம்பரில் சென்னையில் முதல் பதிப்பை தொடங்கிய நேரம், ஒரு நாள் சரியான அடைமழை!புயலும் சேர்ந்து கொண்டது.நாள் முழுவதும் மின்சாரமும் அடியோடு நின்று விட்டது.

பெட்ரோமாக்ஸ் விளக்குகளை வைத்து செய்திகளை எழுதி,அச்சுக் கோர்த்தார்கள்.மின்சாரம் இல்லாமல் எந்திரத்தை எப்படி இயக்குவது?மனித சக்தியை நம்பினார்,ஆதித்தனார்.கையாலேயே எந்திரத்தைச் சுற்றி,பத்திரிக்கையை அச்சிட்டார்.

மறுநாள் காலையில் வெளிவந்த ஒரே நாளிதழ் "தந்தி" தான்!

1948 இல் ஆதித்தனாரின் அண்ணன் சி.தை.ஆதித்தன் மதுரையில் இறங்கி,ஒரு குதிரை வண்டியில் ஏறி,"தந்தி ஆபிசுக்குப் போ" , என்றார்.

வண்டியும் சரியாக தபால் தந்தி அலுவலகம் முன்னால் போய் நின்றது.

"இதில்லை.தந்தி என்று ஒரு செய்தித் தாள் வருகிறது அல்லவா? அந்த ஆபிசுக்குப் போ", என்றார்.

அங்கு போய் இந்த சம்பவத்தைச் சொன்னார்.அதன் பிறகு தான்
தந்தி நாளிதழின் பெயர் "தினத்தந்தி" , என்று ஆனது.

"உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு" , என்ற முதல் முழக்கத்தை முழங்கியவர்.அந்த முழக்கத்துக்கு தன் பத்திரிக்கை வழியே உயிர் கொடுத்தவர்,நம் அய்யாஆதித்தனார் அவர்கள் தான்.

"பத்திரிக்கையில் தலையங்கம் இல்லா விட்டாலும்,செய்திகளை நான் கொடுக்கிறேன்.நீ படித்துக் கொள்,நீ சிந்தித்து ஒரு முடிவுக்கு வா என்கிற துணிச்சலை சொல்லித் தரும்,நடுநிலை நாளேடு தினத்தந்தி என்று ஒரு முறை சொன்னார்", அன்றைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.

ஆதித்தனார் படைப்பான நாள்தாள், "எழுத்தாளர் கையேடு",தமிழ்நாட்டின் எல்லா பத்திரிக்கையாளர்களுக்கும்,இன்றும் கூட சிறந்த வழிகாட்டியாக சிறந்து விளங்கி வருகிறது!

"சனியன்று காலை ஒரு தலைவர் இறந்து போகிறார்" , என்று வைத்துக் கொள்ளுங்கள்.மாலைத் தாள்கள் எல்லாம் செய்தியை வெளியிட்டு விடும்.நம்முடையதோ மறுநாள் காலையில் வெளியாவது."ஞாயிறு காலையில் தலைவர் இறந்தார்" , என்று போடலாமா?கூடாது.பின் எப்படி?இன்று தலைவர் உடல் அடக்கம் என்று தலைப்புத்தர வேண்டும்", என்றெல்லாம் பாடம் நடத்தியவர்,ஆதித்தனார்.

மற்ற பத்திரிக்கைகள் "தபால் கார்டு விலை உயர்கிறது" , என்று செய்தி வெளியிட்டால்,"தந்தியோ இன்று முதல் தபால் கார்டின் விலை உயர்கிறது" ,என்ற தலைப்போடு வெளிவரும்.

மற்ற பத்திரிக்கைகள் பட்டினிச்சாவு செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்தபோது தந்தி மட்டும் பெரிதாக வெளியிட்டு பிரசுரம் செய்யும்.

பெரியார்,அண்ணா,கம்யூனிஸ்ட் தலைவர்களின் பிரச்சாரங்களை பற்றிய செய்திகளை வெளியிட்ட ஒரே நாளேடு நம் தினத்தந்தி தான்!

ரிக்.ஷாக்காரர்கள்,வாட்ச் மேன் போன்ற அடித்தட்டு மக்களும் படிக்கும்படியான எளிய தமிழில் வெளிவந்ததால், உயர் வகுப்பினர் யாரும் படிக்க மாட்டார்கள்.நாளடைவில்(கவுரவம் போய் விடும் என்பதால் ) ஆங்கில நாளேடான இந்து பத்திரிக்கைக்கு இடையில் மறைத்து வைத்துக் கொண்டு படிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப் பட்டார்கள். அந்த வளர்ச்சிக்கு பெயர் தானே, "தினத் தந்தி " !

காலை நாளிதழ் என்பதால் பெரும் பாலும் இரவு நேரத்தில் தான் அச்சாகும். "மெஷின் நின்றால் வீட்டிலிருக்கும் தனக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்" , என்பார்.

பழுதான பாகத்தை ஒர்க் ஷாப்புக்கு தூக்கிப் போவது,மின்சார கோளாறு போன்ற பிரச்னைகளை சரி செய்த பிறகே, வீட்டுக்கு தூங்கப் போவார்.

1950 ஆம் ஆண்டில் ஒரு நாள் திடீரென்று வெளித் தொழிற்சங்க தலையீட்டின் காரணமாக தினத்தந்தி அலுவலகத்து தொழிளாலர்களும் வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள்.

ஒரு நாள் கூட தினத்தந்தி நிற்கக் கூடாது என்பது தானே ஆதித்தனாரின் கொள்கை ?

30 பேர் மாலை அய்ந்து மணி அளவில் அலுவலகத்தை விட்டு வெளியேறி விட்டார்கள்.

ஆதித்தனார் ஒரே ஒரு துணையாசிரியரோடு 4 பக்கங்களுக்கு தேவையான செய்திகளை தானே எழுதிக் குவித்தார்.வெளியில் சென்றவர்களில் 13 பேர் அன்றே மன்னிப்புக் கோரி மீண்டும் வேலைக்கு வந்து விட்டார்கள்.

பிறகென்ன,தினத்தந்தி வழக்கம் போல வெளிவந்தது!

1948 இல் ஒரு நாள்...

அன்று 7 ஆம் தேதி சம்பள நாள்.சம்பளம் கொடுக்கப் பணம் இல்லை.சேட்டிடம் கடன் வாங்கப் போனவன், " ஏகப்பட்ட கடன் இதற்கு மேல் கடன் தரமுடியாது" , என்று சேட் கண்டிப்பாகச் சொல்லி விட்டார் என்று, வெறுங்கையுடன் திரும்பி வந்தான்.

எந்தக் கஷ்டத்திலும்,"ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது தவறக் கூடாது.யாரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டாம்.இருக்கச் சொல்லுங்கள்.நான் வந்து விடுகிறேன்!" என்று காரை எடுத்துக் கொண்டு ஆதித்தனார்,அய்யா கிளம்பினார்,சேட்டைப் பார்க்க...

_ஆதிசிவம்,சென்னை.






வெள்ளி, ஜூலை 18

தவத்திரு குன்றக்குடி அடிகளார்-பாகம் 4







பாகம் 4
" தவத்திரு குன்றக்குடி அடிகளார்

-அவர்களின் கதை




இனி எந்த ஓட்டலுக்குள்ளும் நுழையக் கூடாது.சொந்தம் பந்தம் என்று யார் வீட்டுக்கும் போகக் கூடாது.சினிமா நாடகம் பார்க்க முடியாது என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்று முடிவெடுத்தார்.

திருநெல்வேலி அருகிலுள்ள பாண தீர்த்தம் பக்கத்தில் காட்டுப் பாதையைக் கடக்கும் போது, ஒரு முரட்டு ஆசாமி வழிமறித்து "ஏண்டா, தடிப்பயலே! உழைத்துச் சாப்பிடாமல் இப்படி சாமியார் வேஷம் போட்டு ஊரையையும் உலகத்தையும் ஏய்த்துப் பிழைக்கிறாயே உனக்கு வெட்கமாக இல்லை?" , என்று திட்டியதுடன் வாய்க்கு வராத மட்டரக வார்த்தைகளால் அர்ச்சனையும் செய்தார்.

நம் பரதேசி கோபப்டாமல் பொறுமையாகவும் ,நிதானமாகவும்,பக்குவமாகவும் தன்னைப் பற்றி எடுத்துரைத்தார்.அந்த முரடனும் மனம் மாறி சாலை வரை நம் பரதேசிக்கு வழித்துணையாக வந்து சென்றான்.

பிறகு திருச்செந்தூர்,கன்னியா குமாரிக்குப் போய் கடலின் நடுவில் இருக்கும் விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானம் செய்தார்.

நம் பரதேசிக்கு சுவாமி விவேகானந்தர் மீது தனி மரியாதை இருந்தது.

முன்பெல்லாம் யாத்திரை மூன்றான்டு காலம் நீடிக்கும். அவர்காலத்திலேயே நவீன போக்குவரத்து வசதிகள் வந்துவிட்டதால்,அவரின் யாத்திரை
47 நாட்களிலேயே முடிவடைந்து விட்டது.

யாத்திரை சென்ற பிறகு பரதேசி பட்டத்திற்கு அடுத்த கட்டம் தம்பிரான் பட்டமாகும்.அந்த பட்டம் பெற பல வருடங்கள் ஆகும்.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக ,யாத்திரைக்கு சென்ற நான்கே மாதங்களில்,நம் பரதேசிக்கு மந்திரக் கஷாயம் கொடுத்து அவரை தம்பிரானாக்கினார் ,மகா சன்னிதனம்.


கந்தசாமி பரதேசியை குறுகிய காலத்தில் தம்பிரானாக உயர்த்தியது ஏற்கனவே இருந்த மற்ற தம்பிரான்களின் மனதில் பொறாமைத் தீயை மூட்டியது.

ஒரு நாள் காலையில் கந்தசாமி தம்பிரான் காவேரி ஆற்றுக்கு குளிக்கச் சென்றார்.அப்போது பேச்சு தமிழாசிரியர் சுந்தரம் பிள்ளைப் பற்றித் திரும்பியது.

"படித்தால் பொருள் விளங்கிப் படிக்க வேண்டும்.இல்லையேல், படித்து என்ன பயன்?குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டாமா?" , என்று கந்தசாமித் தம்பிரான் சொன்னதை...

பொறாமைப் பேய் பிடித்த மற்ற தம்பிரான்கள் கண்,காது,மூக்கு வைத்து கதையை வேறு விதமாக மாற்றி மகா சன்னிதானத்திடம் பற்ற வைத்துவிட்டார்கள்.

விளைவு?

கந்தசாமி பார்த்து வந்த எல்லா வேலைகளும் மற்றத் தம்பிரான்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.அவர் தங்கியிருந்த அறை காலி செய்யப்பட்டு வாழைக்காய்களைக் கனிய வைக்கப் பயன்படும் அறைக்கு மாற்றப்பட்டார்.

மனம் கலங்க வில்லை.தமிழ் இலக்கியத்திற்குள் தன்னைக் கரைத்துக் கொண்டார். தமிழ்க் கற்றவனை தனிமை என்ன செய்து விடும்?

நெருப்பை நிமிர்ந்து தானே எரியும்?

அவருக்குப் பிடித்தமான பொருள்களை, நம் தம்பிரான் மேல் பற்று வைத்திருக்கும் மற்ற தம்பிரான்கள்,நள்ளிரவில் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போய் விடுவார்கள்.

ஒரு நாள் இரவு மகா சன்னிதானம், நம் தம்பிரானை கூப்பிட்டு

"நீ நல்ல பிள்ளை என்றைக்கும் நன்றாகத் தான் இருப்பாய்!" , என்று திரு நீறு வழங்கி ஆசிர்வாதித்தார்.

மகா சன்னிதானத்தின் மனம் பழுத்ததால் .வாழைக்காய் பழுக்க வைக்கும் அறையிலிருந்த நம் தம்பிரான் பழைய அறைக்கு மாற்றப்பட்டார்.பழைய தடைகளும் தகர்ந்தன.

தருமபுர ஆதினத்தில் ஆவணி மூலத் திருநாளை முன்னிட்டு , ஒரு பட்டிமன்றம் நடத்தப் பட்டது.அதுதான் நம் அடிகளாரின் முதல் பட்டிமன்றப் பேச்சு. அந்த மேடைத் தமிழ்தான் தன்னை பட்டிதொட்டிகளில் எல்லாம் கொண்டு போய் நிறுத்தப் போகிறது என்பதை அவர் அப்போது நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்.

"தருமிக்கு பொற்கிழி வழங்கிய வரலாற்றில் தவறு செய்தவர் யார்...நக்கீரரா... இல்லை சிவபிரானா...?" , என்பது தான் அந்த பட்டிமன்றத் தலைப்பு.

"தருமிக்கு சிவபெருமான் பினாமியாக கவிதை எழுதிக்கொடுத்தது.தமிழ்ச் சங்கத்தில் கருத்துடன் தான் மோதவேண்டுமே தவிர,நெற்றிக் கண்ணைக் காட்டி சிவ பெருமான் மிரட்டலாமா,இது வன்முறை வழியில் தன் கருத்தை ஏற்க செய்யும் செயலாகாதா, இது நல்ல மரபாகுமா?

எனவே இப்படித் தவறுகளை சிவபெருமான் செய்திருக்க மாட்டார்.இது திருவிளையாடல் புராணம் பாடிய புலவர் சிவனுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் செய்த தவறு" , என்று நம் தம்பிரான் புதுக்கருத்துடன் அழகாக வாதிட்டார்.



...சுவாமிகளின் பாதச் சுவடுகள் தொடரும்....

_ஆதிசிவம்,சென்னை.


"ஆப்பிள் தோட்டம்"-கவிதை



ஆப்பிள் தோட்டம்-கவிதை


கடவுள் நம்பிக்கை பெரிதா
தன்னம்பிக்கை பெரிதா
யோசித்தான்
தன்னம்பிக்கை இல்லாதவன்

பணக்கார சாமி தானே
எதுக்கு
(உயரமான)
உண்டியல்?

கள்ள வோட்டுக்கு
இரண்டாண்டு சிறைத் தண்டனை
நல்ல வோட்டுக்கு?
அய்ந்தாண்டு தண்டனை!

ஆப்பிள் சாப்பிடாதீர்
விலை அதிகம்
சொன்னாள்
ஆதாம் மனைவி ஏவாள்


_ஆதிசிவம்,சென்னை.






தவத்திரு குன்றக்குடி அடிகளார்- பாகம் 3










பாகம் 3
தவத்திரு குன்றக்குடி அடிகளார்

-அவர்களின் கதை




ரங்கநாதன் திருச்சியில் உள்ள டி.வி.எஸ் பஸ் கம்பெனியில் செக்கிங் வேலைக்கு விண்ணப்பம் செய்தான்.

அந்தக் கால பஸ்களும்,லாரிகளும் அடுப்புக் கரியால் தான் ஓட்டப்பட்டன.அதனால் அங்கு கரி மூட்டையை தலையில் தூக்கிப் போய் கரி அடுப்பு தொட்டியில் நிரப்பும் வேலைதான் கிடைத்தது..

வேலை பிடிக்காததால் ,ராயபுரத்தில் தனியார் காகிதத் தோழிற்சாலை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தான்.நான்கு மாதங்களாக ஊதியம் எதுவும் தரவில்லை என்பதால் ,அந்த வேலையையும் விட்டு விட்டான்.

அப்புறம்,ஆரம்ப பள்ளி ஆசிரியர் வேலை கிடைத்தது.அதுவும் ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்க வில்லை.

வேலை பார்க்காத ரங்கநாதனை "தண்டச்சோற்று தடிராமன்,சோம்பேறி", என்பது போன்ற பல பட்டங்களைச் சூட்டி பெற்றோர்களும் அண்ணன்களும் பாராட்டினார்கள்.

பக்கத்து தருமபுர ஆதீனத்தில் கணக்கர் வேலை இருப்பதாக கேள்விபட்டு, தந்தையின் வற்புறுத்தலை மீற முடியாமல்,அங்கு தனியே சென்று ,அங்கிருந்த 25 ஆவது குருமாக சன்னிதானமாக வீற்றிருந்த கயிலை குருமணி சுவாமி அவர்களை நேரில் தரிசித்து,நெடுஞ்சாண் கிடையாகத் தரையில் விழுந்து வணங்கிய பிறகு வேலைகேட்டு விண்ணப்பித்தான்.

முதல் பார்வையிலேயே ரெங்கநாதனை சன்னிதானத்திற்குப் பிடித்து போனால், உடனே வேலை கிடைத்தது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகளில் கூட வீட்டுக்குப் போவதில்லை.அங்கேயே தங்கி விடுவான். அப்போதும் கூட நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வதில்,பத்திரிக்கைகளைப் படிப்பதில் ஆர்வமாக இருப்பான்.


ரெங்கநாதனின் ஆர்வம்,அர்ப்பணிப்பு,பணிவு,நேர்மை போன்ற குணங்களால் மகா சன்னிதானத்திற்கு ரங்கநாதனின் மேல், ஒரு பிடிப்பு ஏற்பட்டு இருந்தால்...

ரங்கநாதனைப் பற்றி முகக் கண்ணால் கண்டு வந்து சொன்ன குற்றசாட்டுகளை, சுவாமிகள் தன் அகக் கண்ணால் பார்த்து மன்னிப்பார்.

ஒரு நாள் மகா சன்னிதானம்,ரங்கநாதனிடம் விளையாட்டாக "பழுக்கலாமா?", என்று கேட்டார்.அதன் பொருள் முதலில் புரியாமல் விழித்த ரங்கநாதன்,அதன் விளக்கம் தெளிந்து...

"நானும் மகா சன்னிதானத்தின் ஆதரவில் சாமியாராகப் போகிறேன்", என்று பெற்றோர்களிடம் அனுமதி கேட்டான்.

இந்த விபரீதப் பேச்சால் மிரண்ட பெற்றோர்கள்."இனி அந்த மடத்துக்கே போகக் கூடாது", என்று கடுமையாக கண்டித்தார்கள்.காரியம் கெடப் போகிறது என்று அஞ்சிய ரங்கநாதன் அவர்களின் பேச்சுக்கு கட்டுப் படுவதைப் போல நடித்தான்.

அதன் பிறகு, அவர்களுக்குத் தெரியாமல் 28.07.1945 இல் துறவியாவதற்கு முதல் படியான யாத்திரைக் கஷாயம் பெற்று, தன் பெயரையும் கந்தசாமி பரதேசி என மாற்றிக் கொண்டார்.

இதைக் கேள்விப்பட்ட அவரின் பெற்றோர்கள்,அண்ணன்களும் ஆதீன மடத்திற்கு முன்பு நள்ளிரவில் படையெடுத்து வந்து "குய்யோ முறையோ" எனக் குரல் எழுப்பினார்கள்.அந்த பகுதியே பரபரப்புக்குள்ளானது.

எப்படியாவது கந்தசாமி பரதேசியை ரங்கநாதனாக்கி குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று விடவேண்டும் என்ற திட்டத்தோடு தான் கிளம்பி வந்திருக்கிறார்கள்.

"விடிந்ததும் கண்டிப்பாக வந்து விடுவேன்", என்று வேறு வழி தெரியாததால் இந்த பொய்யான வாக்குறுதி அளித்து அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்,நம் கந்தசாமி பரதேசி.

"துறவியாக வேண்டாம்!" , என்று பரதேசியின் பெற்றோர்கள் அழுது புலம்பி விட்டு போனதை அறிந்த சன்னிதானம்

"நம் பரதேசியை அழைத்து உன் முடிவு என்ன ?" , என்று கேட்டார்.

"ஏற்கனவே எடுத்த முடிவுதான் என்றார்",புதிய பரதேசி.

பரதேசியானால் முதல் கடமையாக தீர்த்த யாத்திரைக்கு காசிக்கோ,கன்னியாகுமரிக்கோ அனுப்புவது வழக்கம்.

"மீண்டும் உன் பெற்றோர்கள் வருதற்குள்,நீ யாத்திரைக்குப் போய் வா.அதற்குள் அவர்களின் மனமும் ஓரவளவு மாறிவிடலாம் என்றார்", சன்னிதானம்.

காவியுடை,மொட்டை தலை,உருத்திராட்சக் கொட்டை மாலை சூடி,ஆதினத்தைச் சேர்ந்த கல்யாண சுந்தர தேசிகரும் பரதேசியோடு வழித்துணையாக அனுப்பப் பட்டார்.

இருவரும் மாயூரம் வரை நடந்து அங்கேயே ரயில் ஏறி, கும்பகோணம்,தஞ்சாவூர்,திருச்சி,திண்டுக்கல் வழியாக மதுரை வந்து சேர்ந்தனர்..

காலையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலில் உள்ள சரவணப் பொய்கையில் தீர்த்தமாடி விட்டு குளக்கரையில் கண்களை மூடித் தியானத்தில் ஈடுப்பட்டார்.

கண்விழித்துப் பாரத்தபோது சுற்றிலும் சில்லரைக்காசுகளாக சிதறிக்கிடந்தன.நம்மை பிச்சைக்காரன் என்று நினைத்து விட்டார்களே என்று பதறி கண்கலங்கி போனார்.

அங்கிருந்த ஓட்டலில் கூட அதே அளவு மரியாதை தான் கிடைத்தது.

"யாராடா அவன் பரதேசிப் பயல், வெளியில் நின்று கொடுப்பதை வாங்கிக் கொண்டு போ!உள்ளே வராதே", என்று துரத்தியடிக்கப்பட்டார்.


...சுவாமிகளின் பாதச் சுவடுகள் தொடரும்....

_ஆதிசிவம்,சென்னை.











புதன், ஜூலை 16

இந்தியா+அமெரிக்கா=அடிமை இந்தியா










இந்தியா+அமெரிக்கா=அடிமை இந்தியா



அந்நிய அமெரிக்க (பன்னாடை) பன்னாட்டு கம்பெனிகள்,நம் இந்தியாவிற்குள் நுழைந்து,இந்த மண்ணில் முளைத்த நமக்கு சொந்தமான சிறிய பெரிய குளிர்பானக் கம்பெனிகள்,குளியல்,சலவை சோப்பு கம்பெனிகள் என ஏராளமான கம்பெனிகளை விலைக்கு வாங்கியோ அல்லது விலைக்கு வாங்காமலோ ஒழித்துக் கட்டிக் கொண்டு...

பெப்சி,கோலா, இந்துஸ்தான் யுனிலீவர் மாதிரியான பெயர்களில், நமக்கு முன்னால் சப்தமில்லாமல் மினுமினுப்புக் காட்டி ஆட்டம்போட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த கம்பெனிகள் எல்லாம் அமெரிக்காவை தான் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகின்றன.

அதே போன்றே சாப்ட்வேர்,BPO எனப்படும் call centre கம்பெனிகள் பெரும்பாலும் அமெரிக்கா தரும் ஆர்டர்களை நம்பியே இங்கே கடை விரித்து இருக்கின்றன.

என்றைக்கு அமெரிக்கா மனசு மாறி கையை விரிக்கிறதோ, அந்த நிமிடமே அதைச் சார்ந்த கம்பெனியில் வேலையில் இருப்பவர்கள் எல்லாம் வேலையிழந்து, டைக் கட்டி நடுத்தெருவுக்கு வர வேண்டியிருக்கும் .



திரைப் படங்களில் கூட அமெரிக்க மாப்பிளைக்களுக்கு தான் அமோக மரியாதை,சாலைகளில் இருசக்கர வண்டிகளில் பறக்கும் இளசுகளின் தலைகளில் கட்டப்படும் கைக்குட்டைகளில் கூட அமெரிக்க கொடிதான்.நாட்டைக் கெடுத்த பெரும் புள்ளிகள் கூட தம் வாரிசுகளை படிக்க வைக்க அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்து தான், பூரித்துப் போய்கிறார்கள்.இப்படி அங்கு இங்கு என எங்கு திரும்பினாலும்
அமெரிக்க மோகம் தலை விரித்தாடுகிறது.

இது இப்படி இருக்க...

சமீபத்தில் கூட "இந்தியர்கள் நிறைய சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.அதனால்தான் உலக அளவில் உணவு பஞ்சம் வந்து விட்டது", என்று திமிர் பேச்சு பேசி மகிழ்ந்து, தன்னை யார் என்று அடையாளப் படுத்திக் கொண்டது,அமெரிக்கா அரசு.

இப்படிப்பட்ட வக்கிர புத்தியுள்ள அமெரிக்காவுடன் தான், கொஞ்சிக் குழைந்து இந்தியாவை அமெரிக்காவிற்கு அடகு வைத்திருக்கிறது, நம் மன்மோகன் "சிங்(க)" அரசு.


ஒரு பக்கம் உலக அளவில் சமாதனத்திற்காக அதிகமான நோபல் பரிசு வாங்கிய நாடு,இன்னொரு பக்கம் ஆபத்தான அணுகுண்டு அழிவு ஆயுதங்களை தயாரித்துக் குவிக்கும் நாடு என்ற பெருமை பெற்றது, ,அமெரிக்கா!இந்த இரட்டைக் கோணல்முகங்களை புரிந்து கொண்டாலே போதும் அமெரிக்கவைப் பற்றி புரிந்து கொள்ள...

நாட்டின் அதிவேகமான வளர்ச்சிக்கு தேவையான மின் சக்தியை,அணு மின் சக்திக் கொண்டுதான் சரி செய்ய முடியும். ஆகவே தான் அணுமின் உற்பத்திக் கருவிகளையும், அதற்கு தேவைப்படும் யுரேனியத்தையும் வாங்கிக் கொள்ளத் தான் இந்த அமெரிக்க ஒப்பந்தம் என்கிறது,நம் ம(ண்)ன் மோகன் சிங் அரசு.

உண்மை தான் என்ன?

அணு ஆயுதப் பரவலைத் தடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் ஐ.நா. வால் அமைக்கப்பட்ட குழுவில் அணுகுண்டு வியாபார நாடான அமெரிக்காவும் ஒன்று.இந்தியாவோடு சேர்ந்து மொத்தம் 36 நாடுகள்.

அந்த குழு தான் நம் நாட்டு அணு உலைகளை ஆய்வு செய்யும்.அந்த குழுவுக்கு திருப்தி இல்லை என்றால், எல்லா உதவிகளையும்,எந்த நேரத்திலும் நிறுத்திக் கொள்ள அதற்குத் தான் உரிமை இருக்கிறது.

நாம் மட்டும் என்ன அணு ஆராய்ச்சியில் குறைந்தவர்களா? என்றால் இல்லை என்றுதான் பதில் கிடைக்கிறது.இத்துறையில் உலகத் தர வரிசையில் இந்தியா 6ஆவது இடத்தில் இருக்கிறது.

அணு ஆராய்ச்சியில் 1952 ஆம் ஆண்டிலேயே இறங்கி விட்டது, நம் இந்தியா.நம் அப்துல்கலாம் காலத்தில் கூட அணுகுண்டை வெடிக்க வைத்து சோதித்து வெற்றி கண்டது.

ஏற்கனவே, ஒருமுறை 1963 இல் ஒப்பந்தம் செய்து கொண்ட அமெரிக்கா, 1983 இல் யுரேனியம் அனுப்புவதை நிறுத்தி ஒப்பந்தத்தை ரத்து செய்து டாட்டா காட்டி விட்டுப் போனது,அமெரிக்கா.மீண்டும் அந்த தாராப்பூர் அணுமின் நிலையம் ரஷ்ய உதவியுடன் மின் உற்பத்தியை தொடங்கியதெல்லாம்,பழைய கதை.

அந்த ஒப்பந்தத்தில் இன்னொரு பெரிய சிக்கலும் இருக்கிறது. ஹைட் என்னும் அமெரிக்க சட்டத்திற்கு இந்திய அரசு கட்டுப்படவேண்டுமாம்.அதாவது அமெரிக்காவில் அவர்கள் போடுகிற தாளத்துக்கு இங்கிருக்கிற இந்திய அரசு ஆட்டம் போட வேண்டுமாம். இந்த கிறுக்குக்கோமாளித் தனத்தை தான் செய்து விட்டு வந்திருக்கிறது,நம் மன்மோகன் சிங் அரசு.

அந்த சட்டம் சொல்வது தான் என்ன?

அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் எல்லா உலக சமாதனத் திட்டங்களுக்கும் ,இந்தியாவும் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமாம்.

அதாவது ஈராக் மீதோ அல்லது வேறு நட்பு நாட்டின் மீதோ அமெரிக்கா அத்து மீறி நுழைந்து அக்கிரமம் செய்யுமாம்.நாமும் அவர்கள் சொல்படி கேட்டு அமெரிக்காவுக்கு ஆதரவாக சண்டைக்குப் போக வேண்டுமாம் அல்லது ஆமாம் சாமி போட்டு விட்டு சும்மா இருக்க வேண்டுமாம்.

அப்படி அமெரிக்காவிற்கு ஆதரவாக இந்தியா நடந்து கொள்ளாத பட்சத்தில் அணு ஆலைக்கு செய்யும் எல்லா உதவிகளையும் , அமெரிக்கா எந்த நேரத்திலும் நிறுத்திக் கொள்ளுமாம்...

சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சியை கலைத்து விடவேண்டும் என்று அப்போதே சொன்னார்,அதன் தலைவராக இருந்த நம் காந்தி.அந்நியர்களை வீரத்தோடு தொரத்தி அடித்த அதே காங்கிரஸ் தான் இன்று வளர்ந்து நம் நாட்டையே அந்நிய அமெரிக்கனுக்கு அடகு வைத்து விட்டு நிற்கிறது!

இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துதான் கம்யூனிஸ்டுகள் கடந்த நான்கு ஆண்டுகளாக ஏன் இன்றும் கூட எதிர்த்து வருகிறார்கள்.


_ஆதிசிவம்,சென்னை.



சனி, ஜூலை 12

"ரத்த ரோஜா"-கவிதை







ரத்த ரோஜா

முட்கள்
உதடுகளைக் கிழித்தாலும்

சிரிக்கத் தெரிகிறது..

ரோஜா!...


_ஆதிசிவம்,சென்னை.






வணக்கம்! என் இனிய இணைய இளைய தமிழகமே...!
Blog Widget by LinkWithin

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

இந்திய அரசே, இலங்கைத் தமிழர்களைக் கொல்லாதே....!

புதிய பூவிது...!

Grab the widget  Tech Dreams

இ மெயில் குழு முகவரியில் இருந்து வரும் தானியங்கி மின்னஞ்சல்களின் திரட்டி இது ....

அதிகம் பார்வையிட்ட பதிவுகள்

நான் இங்க இருக்கேன்....!

http://adobeperson.com/wp-content/uploads/2008/10/photoshop-chatting-logo-website-graphics24.jpg

உடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...

பின்பற்றுபவர்கள்

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Clicky Web Analytics

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner




என்னைப் பற்றி


உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook
"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Recent Comments


இந்த வலைப்பதிவில் தேடு